இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது.
இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு எனப் பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.