நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ரேபரேலி தொகுதிக்கு சோனியா காந்தி வருகை தந்தார். அப்ப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவரிடம் பிரதமர் மோடி வலிமையானவரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையான தலைவர் அல்ல. வாஜ்பாய் ஜி பலம் வாய்ந்தவராக இருந்தபொழுதும் கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதனை மறக்க கூடாது என சோனியா காந்தி கூறியுள்ளார்.
அதுபோல ராகுல் காந்தி கூறும்பொழுது, இந்திய வரலாற்றில் பல தலைவர்கள் நாட்டு மக்களை விட வலிமையானவர்கள் மற்றும் பெரியவர்கள் என அகந்தையுடன் செயல்பட்டனர். நாட்டு மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின் அவரது வலிமை முழு அளவில் தெரியும் என கூறினார்.