இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசினார்.
இந்நிலையில் வெள்ள நிவாரண நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தின் போது வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், மாநில வரிப்பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுதல், மாநில நிதி நிர்வாகத்தில் தலையிடும் மத்திய அரசை கண்டித்தும் கர்நாடகாவை தொடர்ந்து டெல்லியில் கேரள அரசும் இன்று போராட்டம் நடத்த உள்ளது. ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.