2018 ஆம் ஆண்டில் தன்பாலின ஈர்ப்பில் காதல் என்பது குற்றமற்றது என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும் தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்த சூழலில் சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஒரே பாலின ஜோடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள ஒரே பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்க முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கில் 4 விதமான தீர்ப்புகளை வழங்க உள்ளதாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி வருகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரவீந்தர பட், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் தீர்ப்பை வழங்கி வருகின்றனர். மொத்தமுள்ள 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பை வழங்கி வருகின்றனர்.
தீர்ப்பில் தலைமை நீதிபதி சந்திர சூட், “200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கப்படாத விஷயங்கள் இப்போது ஏற்கப்படுகிறது. நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தின் சரத்துகளை கையாள முடியும். சட்டத்தை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது. திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ, சட்டமன்றங்களையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன் பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.