உலக கோப்பை கிரிக்கெட், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வாகுமா என்ற எதிர்பார்ப்பை விட, தோனி பாஜகவுக்கு செல்ல இருக்கிறார் என்று வெளியான தகவல், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இறுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டபேரைவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த வருடம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தோற்ற நிலையில், ஜார்க்கண்டில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இதற்காக மாநில பாஜக, தில்லி தலைமையிடம் பல முக்கிய தகவல்களை சுட்டிக்காட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், " கடந்த 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து பாஜகவை சேர்ந்தவர்களே இங்கு அதிகமுறை முதல்வர்களாக இருந்துள்ளனர். சில தருணங்களில் பாஜகவின் ஆதரவோடு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக மாநிலம் நம்முடைய வசமே உள்ளது. விரைவில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதை நாம் தொடர வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக மாநிலத்தில் நாம் வெற்றிபெற்று வரும் சூழ்நிலையில், அரசுக்கு எதிரான மனநிலையை பொதுமக்கள் வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் காங்கிரஸ் பெற்ற தோல்வியினால் ஏற்பட்ட பொதுமக்களின் அனுதாபம் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலித்தால் நம்முடைய வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகும். எனவே, இவை அனைத்தையும் மீறி நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் அசைக்க முடியாத ஆதரவு உள்ள தோனியை நம்முடைய கட்சியின் சார்பாக களம் இறக்கினாலோ அல்லது முதல்வர் வேட்பாளராக முன் மொழிந்தாலோதான் எளிதாக நாம் வெற்றி பெறலாம். அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கினால், யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்டமாக வெற்றியை மாநிலத்தில் பெறலாம் " என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
தோனியை பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை தோனிக்கு மிக வேண்டியவர்கள் மூலமாக பாஜக ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை என்று கூறுகின்றனர் தில்லி பாஜக தலைவர்கள். தோனி இந்த முடிவை ஏற்பாரா என்பதுதான் தற்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி. தற்போது உலககோப்பையில் ஆடிவரும் தோனி, இந்த உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு, அவர் ஓய்வை அறிவித்தால் நிச்சயமாக அவர் பாஜகவில் இணைவார் என்று அம்மாநி பாஜக தலைமை நம்புகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளைஞர்களின் வாக்குகளை கவர இவர் ஒரு முகமாக நிச்சயம் இருப்பார் என்று தில்லி தலைமையும் நம்புவதாக தெரிகிறது. இந்நிலையில், தோனி பாஜகவில் இணைவது உண்மையா பொய்யா என்று தெரியாமல் அவரின் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அமித் ஷா உடன் நல்ல தொடர்பில் இருக்கும் தோனி, பாஜகவில் இணைவது காலத்தின் கட்டாயம் என்று கூறுகின்றனர் பாஜக மேலிடத்தலைவர்கள். என்ன செய்ய போகிறார் தோனி என்பது இன்னும் முப்பது நாட்களில் தெரிய வரும்!