தேர்தல் வியூக வகுப்பாளராக இந்தியாவில் புகழ்பெற்றவர் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸ், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், திமுக என பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றியவர். இதில் வெற்றியும், தோல்வியும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தமிழ்நாட்டில் திமுகவுக்காகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸிற்காகவும் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். நடந்த முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது திரிணாமூல் காங்கிரஸ்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சரான அம்ரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். அதனையேற்று கடந்த சில மாதங்களாக முதல்வருக்கு ஆலோசனைகளை வழங்கிவந்தார் பிரசாந்த்.
இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தார் பிரசாந்த் கிஷோர். 2024இல் நடக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்ற அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ராகுல் காந்தி. அதற்கு பிரசாந்த் கிஷோரும் சம்மதித்ததாக தெரிகிறது.
அதன்படி முதற்கட்டமாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பில் தொடங்கி, தேசிய அளவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புவரை அனைத்து நிலைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று ராகுல் காந்திக்கு அவர் ஆலோசனை வழங்கியதாகவும், அதனை ராகுல் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்குக்கும், கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் நீண்டகாலமாக பணிப்போர் நடந்துவருகிறது. சித்துவின் நண்பரான பிரசாந்த் கிஷோர், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமியுங்கள் என ராகுலுக்கு அழுத்தம் கொடுத்தார். அது ராகுலுக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், பிரசாந்தின் யோசனையை ஏற்று காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்திலிருந்து முதலமைச்சர் அமரீந்திர் சிங்குக்கும் பிரசாந்துக்கும் ஏழாம் பொருத்தமாக மாறியது. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இதனையடுத்து, முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தற்போது அறிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
இதுகுறித்து முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில், ’’பொதுவாழ்விலிருந்து விலகியிருக்கும் என்னுடைய தற்காலிக முடிவால், முதன்மை ஆலோசகர் பதவியைத் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்னும் நான் முடிவு எடுக்காததால் எனது ராஜினாமாவை ஏற்று பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.