சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 22-ம் தேதி இந்த சீராய்வு மனு மீதான விசாரணை நடக்கும் என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்த நீதிபதி மல்ஹோத்ரா மருத்துவ விடுப்பில் இருந்ததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா மாநில அரசு பெண்களை அனுமதிக்கும் முடிவில் உறுதியாக இருந்தது. இது குறித்து தேவசம் போர்டு சார்பில் இதற்கு கூறப்பட்ட பதிலில், 'பெண்களை அனுமதிக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பை தேவசம் போர்டு மதிப்பதாகவும், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என்றும் கூறியது. இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம். அனைத்து தரப்பு வாதங்களும் இன்று நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.