மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 13 ஆம் நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மேலும், இன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கும் ஆதரவும் தெரிவித்தார்.
இந்தநிலையில் பாஜகவின் டெல்லி காவல்துறை, விவசாயிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பியது முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகவும், அவரின் வீட்டிற்குள் நுழையவோ, வீட்டிலிருந்து வெளியேறவோ யாரையும் அனுமதிக்கவில்லை எனவும் ஆம் ஆத்மி கட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்கச் சென்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அகிலேஷ் திரிபாதியை டெல்லி போலீஸ் சந்திக்கவிடாமல் தடுத்துத் தாக்கியதாகவும் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டது.
ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டை டெல்லி காவல்துறை மறுத்தது. கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்றும், அவர் விரும்பும் இடத்திற்குச் செல்லலாம் எனவும் அம்மாநில காவல்துறை கூறியது.
இந்தநிலையில், டெல்லி மாநிலத் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களும் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், துணை முதல்வரான தன்னையே, முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்கவிடவில்லை. ஆனால் அமித்ஷாவின் போலீஸ், கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை எனக் கூறுகிறது. நமது நாட்டின் விவசாயிகள் பக்கம் நிற்பது பெரும்குற்றமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், போராட்டம் நடத்தும் விவசாயிகளைச் சிறை வைக்க டெல்லியின் மைதானங்களைத் தர மறுத்ததால், கெஜ்ரிவால் மத்திய அரசால் குறிவைக்கப்படுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.