இந்தியாவில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் மீது கரோனா தடுப்பூசி சோதனையும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், தடுப்பூசி செலுத்தப்படுவதில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், "தரவுகள் படி இந்தியாவில் 17.2 கோடி பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் குறைந்தது ஒரு டோஸாவது செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையில் நாம் அமெரிக்காவை முந்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த டாக்டர் வி.கே.பால், "கோவாக்சின் மற்றும் சைடஸ் தடுப்பூசிகள் ஏற்கனவே குழந்தைகள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.
மேலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலகசுகாதார நிறுவனம், அவசர கால ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் பாரத் பயோடெக் மற்றும் உலகசுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந்த மைல்கல் விரைவில் அடைய முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என கூறியுள்ளார்.