Skip to main content

போலீசாரை தாக்க முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு! 

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

 

Chengalpattu Dt Ashok Kumar Incident

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அசோக் குமார் (வயது 28). இவர் காவல்துறையின் ஏ பிளஸ் வகை சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கொலை உட்பட 4 கொலை வழக்குகளும், போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகள் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக ரவுடி அசோக் குமாரைச் செங்கல்பட்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இத்தகைய சூழலில் தான் சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள ஆப்பூர் வனப்பகுதியில் ரவுடி அசோக் குமார் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு இன்று (28.03.2025) ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து இன்று காலை முதல்  காவல்துறையினர் ஆப்பூர் வனப்பகுதியில் அசோக் குமாரைத் தீவிரமாகத் தேடிவந்தனர். அப்போது காவல்துறையினர் அசோக் குமார் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். அதே சமயம் இதனை அறிந்த அசோக் குமார் காவல்துறையிடம் சிக்காமல் இருக்க காவல்துறையினரைத் தாக்க முயன்றதுடன் அங்கிருந்து தப்பிக்கவும் முயன்றுள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற அசோக் குமாரை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் அசோக் குமாரின் வலது காலின் முட்டிக்குக் கீழ் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதனால் படுகாயமடைந்த அசோக்குமாரை காவல்துறையினர் பிடித்தனர். அதன் பின்னர் அவரை சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வனப்பகுதியில் ரவுடி ஒருவர் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்