
தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 04.10.2023ஆம் தேதி தஞ்சை ரயில் நிலையம் அருகில் கஞ்சா எனும் போதைப்பொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்த 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் சந்திராவால் குற்றம்சாட்டப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசை (வயது 28), செல்வராமர் (வயது 40), சசிக்குமார் (வயது 36), சரித்திர பதிவேடு குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த கார்த்தி (வயது 29) மற்றும் பிரபு (வயது 26) ஆகியோரை 04.10.2023ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இவ்வழக்கின் புலன்விசாரணை முடித்து இவர்கள் மீது 19.10.2023ஆம் தேதி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கினை விசாரணை செய்த தஞ்சாவூர் மாவட்ட இன்றியமையா பொருட்கள் சட்ட வழக்குகளுக்கான அமர்வு நீதிமன்ற நீதிபதி (EC - COURT) சுந்தர்ராஜன் நேற்று (27.03.2025) வழக்கில் தொடபுடைய ஆசை,செல்வராமர், சசிக்குமார், கார்த்தி மற்றும் பிரபு ஆகியோருக்கு தலா 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். அதோடு இந்த வழக்கில் திறம்பட பணிப்புரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.