தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இதையொட்டி, ராஜஸ்தானில் பாலி பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (20-11-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜஸ்தானில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மாநிலத்தை வளர்ச்சியில் இருந்து பின்னுக்கு தள்ளியுள்ளது. காங்கிரஸுக்கு ஊழலும், குடும்ப அரசியல் மட்டுமே முக்கியம். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வருகின்றனர். சனாதன தர்மத்தை அழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கலாச்சாரத்தை அழிப்பதாகும். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் பெண்கள் குறித்து அவதூறாக பேசினார். ஆனால், அவருடைய பேச்சுக்கு காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் எந்தவித கருத்தும் கூறவில்லை” என்று தெரிவித்தார்.