பொதுமக்களுக்கான கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமரும் சுகாதாரத்துறை அமைச்சகமும் மாறுபட்ட தகவல்களைத் தெரிவிப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு மத்தியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள மக்கள் அனைவர்க்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். ஆனால், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் அளித்த பேட்டியில், “நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசு ஒருபோதும் கூறவில்லை" எனத் தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மாறுபட்ட இந்த கருத்துகளைப் பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
இதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவில், "நாட்டில் ஒவ்வொரு இந்தியருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் எனப் பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடியின் பேச்சு வெற்றுப்பேச்சு என்பதைப் போல், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கரோனா தடுப்பூசி போடத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனது நிலைப்பாட்டிலிருந்து அடிக்கடி மாறும் யூடர்ன் அரசாக மத்தியில் ஆளும் அரசு இருக்கிறது. இந்திய மக்கள் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு பெற முடியுமா. மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்குமா அல்லது கொடிய வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் சுதேசி தயாரிப்பை நம்பி இருக்க வேண்டுமா" எனத் தெரிவித்துள்ளது.