கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். இதற்கிடையே, பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனை ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை கூறப்படுகிறது. இதனை கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம், ‘பெங்களூர் மெட்ரோ ஒரு பொது போக்குவரத்து. ராஜாஜி நகரில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை எடுக்கப்பட்டு, பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.