
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அம்மாநில கட்சிகள் இறங்கியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசும், தேர்தலைக் குறிவைத்து துணை பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும், அண்மையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலைக் குறிவைத்தே இந்த விரிவாக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள யோகி ஆதித்யநாத், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 325 முதல் 350 இடங்களை வெல்லும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக நான் தீவிர மாநில அரசியலில் இருந்ததால், உ.பி.யின் அரசியல் இயக்கவியல் எனக்கு நன்றாகப் புரிகிறது. உத்தரப்பிரதேச வாக்காளர்களின் அரசியல் புரிதல் மற்றும் அரசியல் முதிர்ச்சி குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் போராட்டம் குறித்து பதிலளித்த அவர், "விவசாயிகளின் போராட்டத்திற்கு எங்களது எதிரிகள் நிதியுதவி செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தப் போராட்டம், இடைத்தரகர்கள் செயல்படும் மாநிலங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில், கொள்முதல் மற்றும் இழப்பீட்டுக்காக விவசாயிகள் அரசுடன் நேரடியாக தொடர்பில் உள்ளார்கள். எழுப்புவதற்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லாததால், விவசாயிகள் போராட்டம் என அழைக்கப்படும் இதனை எதிர்க்கட்சிகள் விஸ்தரிக்க முயல்கின்றனர்" என தெரிவித்துள்ளார்.