Skip to main content

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.8 ஆம் தேதி தேர்தல்!

Published on 06/01/2020 | Edited on 14/01/2020

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது. 

delhi union assembly election date announced election commissioner sunil arora


2020 ஜனவரி 1- ஆம் தேதி நிலவரப்படி டெல்லி மாநிலத்தில் 1 கோடியே 46 லட்சத்து 92 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக வாகன வசதி செய்யப்படும். 
 

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக சுமார் 90 ஆயிரம் அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும் 13,750 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலை, நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.  


டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் ஜனவரி 14- ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21- ஆம் தேதி ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்ப பெற ஜனவரி 24 ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெறும். சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்." இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்