இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல்-டீசல் விலை தினசரி உயர்ந்து வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன்பிறகு சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் பெரிதாக மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கான காரணம் குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம், கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் ஒரு பேரலுக்கு 70 அமெரிக்க டாலருக்கு மேல் சென்றுள்ளதாகும். இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், இது இங்குள்ள நுகர்வோரை பாதிக்கிறது" எனக் கூறியுள்ளார்.
பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பெட்ரோலிய பொருட்களின் விலை உலக சந்தையால் கட்டுப்படுத்தப்படுகிறது. துறையின் பொறுப்பாளராக, எரிபொருளை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என நான் கருதுகிறேன். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் இதுகுறித்து ஒருமித்த கருத்தை எட்டும்போதுதான் அது செய்யப்படும். ஜி.எஸ்.டி கவுன்சில் தான் இது குறித்து ஒரு கூட்டு முடிவை எடுக்கும்" எனக் கூறியுள்ளார்.