காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேகதாது பகுதியில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பார்ப்போம்!
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உபரியாகக் கடலில் கலக்கும் 40 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்தும் திட்டம் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம்.1958- ஆம் ஆண்டு காவிரி, குண்டாறு, வைகை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2008- ஆம் ஆண்டு ரூபாய் 3,290 கோடியில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, காவிரி- குண்டாறு திட்டத்தை ரூபாய் 14,000 கோடி செலவில் செயல்படுத்தப்போவதாக, கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
கர்நாடக அரசின் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக சட்டமன்றக் கட்சிகளின் குழு கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.