டெல்லி கேஷப்பூர் மண்டி என்ற பகுதியில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளது குறித்து இன்று (10.03.2024) அதிகாலை ஒரு மணியளவில் தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தகவல் டெல்லி முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டன. அதே சமயம் டெல்லி அமைச்சர் அதிஷி சம்பவ இடத்திற்கு இன்று காலை வந்து மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் இளைஞரை உயிருடன் மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மேற்கொண்ட 12 மணி நேர முயற்சி தோல்வியில் முடிவடைந்து இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி உயிரிழந்தவர் சுமார் 30 வயதுடைய ஆண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஆழ்துளை கிணறுக்குள் இளைஞர் எப்படி விழுந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார் என்ற சோகமான செய்தி கிடைத்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சுமார் 14 மணி நேரம் மீட்புப் பணியில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட என்.டி.ஆர்.எஃப்-க்கும் (NDRF), டெல்லி மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.