கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் பிளாஸ்மாக்களை சேகரிக்க 'பிளாஸ்மா வங்கி' தொடங்கவுள்ளது டெல்லி அரசு.
இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இன்று காலை நிலவரப்படி 5,491,97பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,487 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,774 ஆக உயர்ந்துள்ள நிலையில், கரோனா பாதித்த 2,10,936 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு விதமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த, பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலனளிப்பதாக ஆரம்பம் முதல் டெல்லி அரசு தெரிவித்து வருகிறது.
கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நபர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் கரோனா எதிர்ப்புச் சக்தியைக் கொண்ட பிளாஸ்மாவை கொண்டு, சிகிச்சையளித்தால் நோயாளிகள் விரைவில் குணமடைவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து வருகிறார். டெல்லியில் இந்த முறை நல்ல பலனைக் கொடுத்ததையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சையளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் பிளாஸ்மாக்களை சேகரிக்க பிளாஸ்மா வங்கி தொடங்கவுள்ளது டெல்லி அரசு.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெல்லியில் 'பிளாஸ்மா வங்கி' தொடங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. 'பிளாஸ்மா வங்கி' அடுத்த இரண்டு நாட்களில் செயல்படத் தொடங்கும். குணமடைந்த நோயாளிகள் அவர்களின் பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். சிகிச்சைக்காக பிளாஸ்மா தேவைப்படும் அனைவருக்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பிளாஸ்மா வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.