கேரளாவில் திருமணமான இரண்டே வருடங்களில் மனைவியைப் பாம்பை விட்டுக் கடிக்கவைத்து கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் அடூரைச் சேர்ந்தவர் சூரஜ் (27). தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த சூரஜிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உத்ரா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. 100 சவரன் நகை, கார் உள்ளிட்ட வரதட்சனைகளோடு உத்ராவைத் திருமணம் செய்துகொண்ட சூரஜ் அடூரில் உள்ள தனது வீட்டில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 2 ஆம் தேதி, வீட்டிற்கு வெளியே உத்ராவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இதனைப் பார்த்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அங்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் ஏப்ரல் 22 அன்று உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில் மே 7- ஆம் தேதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டின் படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உத்ராவின் பெற்றோர், தங்கள் மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் உத்ரா விஷப் பாம்பு கடித்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தனது மக்களின் இறப்பில் சந்தேகமடைந்த சித்ராவின் தந்தை இதுகுறித்து போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், கணவர் சூரஜ் தான் உத்ராவைப் பாம்பை விட்டுக் கடிக்கவைத்துக் கொன்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாம் திருமணம் செய்வதற்கு இடையூறாக இருந்த உத்ராவைக் கொல்ல திட்டமிட்டு 10,000 ரூபாய் கொடுத்து மார்ச் 2 அன்று விஷப்பாம்பு ஒன்றை வாங்கி வீட்டில் விட்டுள்ளார் சூரஜ். இந்த முயற்சி தோல்வியில் முடிந்து, உத்ரா பிழைத்துக்கொண்டதை அடுத்து மீண்டும் மே 2 ஆண்டு 10,000 ரூபாய் கொடுத்து மற்றொரு பாம்பை வாங்கி, பெற்றோர் வீட்டிலிருந்த உத்ராவின் அறையில் விட்டுள்ளார் சூரஜ். இதில் பாம்பு இரண்டுமுறை உத்ராவை கடித்து அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் உறுப்பினராக இருந்த சூரஜ், அதனைப் பயன்படுத்தி பாம்புகளைப் பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, சூரஜிற்குப் பாம்பு விற்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.