இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரண்டாவது கரோனா அலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லியில் தற்போது கரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதனையடுத்து டெல்லியில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இருப்பினும் கரோனா பரவல் குறையாத நிலையில், தற்போது டெல்லி அரசு மேற்கொண்டு சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
டெல்லி அரசின் பேரிடர் மேலாண்மை வாரியம், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வரும் அலுவலகங்களை தவிர, டெல்லியில் உள்ள அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது. அதேபோல் பார்களை மூடவும் டெல்லி அரசின் பேரிடர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை பிறப்பித்துள்ள பேரிடர் மேலாண்மை வாரியம், உணவை பார்சல் வழங்கவும், உணவை வீடுகளுக்கு பார்சலில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கியுள்ளது.