வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் உட்பட மூன்று பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கலவரத்திற்கு முன்பு, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் நேற்று உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி முரளிதர், நேற்று இரவே பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இந்த சூழலில் இன்று இது தொடர்பாக விசாரணையை டி என் படேல் மற்றும் சி.ஹரிசங்கர் அடங்கிய அமர்வு மேற்கொண்டது.
இந்த விசாரணையின் போது காவல்துறை தரப்பில், "நகரில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல்லி காவல்துறையும், அரசும் இந்த விஷயத்தில் இப்போது வரை முடிவு எடுக்கவில்லை. நாங்கள் இப்போதைக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் முடிவை ஒத்திவைத்துள்ளோம். சரியான நேரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
இந்த விவாதத்தின் போது பேசிய மனுதாரரின் வழக்கறிஞர், "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் அமைதியான வழியில்தான் சென்றுகொண்டிருந்தது. மக்களைக் கொல்லுங்கள் என்பன போன்ற வெறுப்பு பேச்சின் காரணமாக வன்முறை வெடித்தது. எனவே அப்படி பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும்" என வாதிட்டார்.
இறுதியில், இந்த வழக்கின் தன்மை மற்றும் தற்போதைய சூழலை கருத்தில் கொள்வதாக கூறிய நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வாரங்களில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.