
ராஜஸ்தான் அரசியல் குழப்பங்களுக்குப் பின்னணியில் பா.ஜ.க.தான் இருப்பதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து 30 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறிய சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து நேற்று காலை அசோக் கெலாட் வீட்டில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும், இன்று காலை சொகுசு விடுதியில் நடைபெற்ற எம்.எல்.ஏ க்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. மேலும், சச்சின் பைலட்டின் ஆதாராளர்கள் வேறொரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இதனையடுத்து சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள அசோக் கெலாட், "நீண்ட காலமாக பா.ஜக.. சதி செய்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதால் கட்சி மேலிடம் இந்த முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய சதி என்று எங்களுக்குத் தெரியும்; இப்போது எங்கள் நண்பர்கள் சிலர் வழிதவறி டெல்லியில் தஞ்சமடைந்துள்ளனர். சச்சின் பைலட்டின் கைகளில் எதுவும் இல்லை, இந்த சம்பவங்களை நடத்தி வருவது பாஜக தான். பாஜக தான் அந்த உல்லாச விடுதியை ஏற்பாடு செய்துள்ளது, அவர்கள் தான் இவை அனைத்தையும் நிர்வகிக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றிய அதே அணி இங்கேயும் தற்போது வேலை செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.