
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் துறை ரீதியான மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது.
இத்தகைய சூழலில் தான் இன்றைய (20.03.2025) கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் பங்கேற்றார். அதே போன்று பா.ம.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி பங்கேற்று அவையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு வேல்முருகன் பேச முயன்றார். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வேல்முருகன் அவரது இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் அப்பாவுவை நோக்கி நடந்து சென்றார். இதற்கு சபாநாயகர் அப்பாவு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக சட்டப்பேரையில் பேசுகையில், “வேல்முருகன் அதிக பிரசங்கித் தனமாக நடந்துகொள்கிறார். சட்டப்பேரவையின் மாண்பை மீறி நடந்துகொள்ளும் வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து மாண்பைக் குறைத்துப் பேசுவது ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்ததில்லை. இனிமேல் வேல்முருகன் இதுபோல் நடந்துகொள்ளக்கூடாது. அதே சமயம் எந்த உறுப்பினரும் இது போல் நடந்துகொள்ளக் கூடாது” என எச்சரிக்கை விடுத்தார்.