
கடந்த 1981ஆம் ஆண்டு நவமர் 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் 24 பட்டியலின மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டில் இருந்து 1989ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இம்மாநிலத்தின் தெஹுலி எனும் கிராமத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த குன்வர் பால் என்பவர், வேறு சாதியைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலில் இருந்துள்ளார். அப்போது, குன்வர் பாலும், வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணும் நண்பர்களாக இருந்தது அந்த கும்பலுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால், அங்கு சாதி தொடர்பான மோதல் தொடங்கியுள்ளது. இதனால், கடந்த 1981ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி காக்கி உடையணிந்த அந்த கொள்ளை கும்பல், ஊருக்குள் புகுந்து பட்டியலின மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், 24 பட்டியலின மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இத்துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக, டெஹுலியில் இருந்து ஃபிரோசாபாத்தில் உள்ள சதுபூர் வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து, குற்றவாளிகள் 17 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 1984 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்த வழக்கின் விசாரணை அலகாபாத்திற்கு மாற்றப்பட்டு 2024 வரை தொடர்ந்தது. அதன் பிறகு, அது மெயின்புரியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட கொள்ளைக் கும்பல் தலைவர்களான சந்தோஷ் சிங் மற்றும் ராதே உள்ளிட்ட 14 பேர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்திலேயே உயிரிழந்தனர்.
கடந்த 44 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ராம்சேவக் (70), கப்டன் சிங் (60) மற்றும் ராம்பால் (60) ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது. மேலும், அவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.