டெல்லி ஜான்சிராணி சாலையில் அனஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (08.12.2019) அதிகாலை 5.22 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ விபத்தில் சிக்கி இருந்த 59- க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 30- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கட்டட உரிமையாளரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூபாய் 1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் பாஜக சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று பாஜக எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்தார். இந்நிலையில் எல்என்ஜிபி மருத்துவமனைக்கு சென்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தீ விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
தீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.