Skip to main content

“டீப் ஃபேக் வீடியோக்கள் வெளிவருவது கவலை அளிக்கிறது” - பிரதமர் மோடி

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

"Deepfake videos coming out is worrying" - PM Modi

 

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இதற்குப் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, கத்ரினா கைஃப், கஜோல் ஆகிய நடிகைகளில் போலி வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

 

போலி வீடியோ தொடர்பாகச் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் தான் முதலில் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து, பின்னர் மற்ற தளங்களில் பரவலாகப் பகிர்ந்துள்ளார் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் டீப் ஃபேக் வீடியோ வெளிவருவது கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “இது போன்ற பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இது போன்ற போலி வீடியோக்கள் வெளிவருவது மிகவும் கவலை அளிக்கிறது. இது குறித்து சாட் ஜிபிடி குழுவினருடன் பேசி எச்சரித்துள்ளேன். தொழில்நுட்பத்தை பொறுப்புடன் கையாள வேண்டும். ஊடகங்கள் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்