மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக போரட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கடந்தாண்டு குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி வன்முறையாக மாறியது. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர்களின் புனித கொடி எற்றப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், செங்கோட்டையில் கொடியேற்றியதை பஞ்சாபை சேர்ந்த நடிகர் தீப் சித்து ஃபேஸ்புக் லைவ்வில் ஒப்புக்கொண்டார். ”எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக செங்கோட்டையில் நிஷான் சாஹிப்பை (சீக்கியர்களின் புனிதக் கொடி) ஏற்றினோம். தேசியக்கொடியை அகற்றவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையில் நடைபெற்ற கலவரத்தில் முக்கிய குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டு தீப் சித்து கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஜாமீனில் இருந்து வந்த அவர், தற்போது டெல்லியிலிருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டா செல்லும் வழியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியாகியுள்ளார். அவரது கார், லாரியில் மோதியதில் படுகாயமடைந்த தீப் சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்து வருகின்றனர்.
செங்கோட்டையில் சீக்கியர்களின் புனித கொடியேற்றப்பட்டது சர்ச்சையான நிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளாண் சங்கங்கள், "தீப் சித்து ஒரு சீக்கியர் அல்ல, அவர் பாஜகவின் ஊழியர்” என குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.