நடைபெறவிருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் நாணயம், கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்யவும் இந்த மசோதா வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ஆர்பிஐ உருவாக்கும் வகையில் இந்த மசோதா இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 18 ஆம் தேதி, புதிய யோசனைகளை உருவாக்கவும், வளர்ந்துவரும் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்களால் ஏற்படும் வாய்ப்புகள் மற்றும் சவால்களைப் பற்றி விவாதிக்கவும், பொதுவான புரிதலை நோக்கிச் செயல்படவும் அரசியல், வணிக மற்றும் அரசாங்கத் தலைவர்களை ஒன்றிணைக்கும் கூட்டம் சிட்னியில் நடைபெற்றது. அந்த உரையாடலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது பல்வேறு தொழிநுட்ப அம்சங்கள் குறித்துப் பேசிய மோடி, "உதாரணமாக, கிரிப்டோகரன்சியையோ அல்லது பிட்காயினையோ எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து ஜனநாயக நாடுகளும் இதில் இணைந்து செயல்படுவதும், தவறான கைகளுக்குச் சென்றுவிடாமல் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம். தவறான கைகளுக்கு என்றால் அது நமது இளைஞர்களைக் கெடுத்துவிடலாம்" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.