கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.
இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.