விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவுக்குக் காரணமான எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. உட்பட 12 பேர் ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையில் கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட விஷவாயுக்கசிவால் 15 போ் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அம்மாநில நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், விசாரணை முடியும்வரை ஆலையைத் திறக்கவோ, ஆலைக்குள் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துகள் எதுவும் வேறு இடங்களுக்கு மாற்றவோ கூடாது என உத்தரவிட்டனர். அதே போல ஆலையின் இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும்வரை ஆலையின் இயக்குநர்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது எனவும் அறிவித்தது. இதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த மூன்று அதிகாரிகளை ஆந்திர அரசுப் பணியிடை நீக்கம் செய்தது.
மேலும், ஆந்திர அரசு இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த நீரப்குமார் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இந்த விசாரணையில், விபத்தின் போது தொழிற்சாலையில் உள்ள 36 சைரன்களுமே வேலை செய்யவில்லை எனவும், இதற்கு மனிதத் தவறே காரணம் எனவும் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் நகரக் காவல் ஆணையர் மீனா தலைமையிலான போலீஸார் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்துக்குச் சென்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சங்-கீ-ஜாங், தொழில்நுட்ப இயக்குநர் டி.எஸ். கிம் கொரியன், கூடுதல் இயக்குநர் பூர்ண சந்திரராவ் உட்பட 12 பேரைக் கைது செய்தனர்.