டெல்லி சேவா பவனில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழகம் சார்பாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். கர்நாடகா சார்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயிக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கிய கர்நாடகா, பருவ மழை பெய்யவில்லை, அணைகளில் நீர் இல்லை என கூறி தண்ணீர் தர மறுத்துவிட்டது.
இதனையடுத்து இன்று நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டு தமிழகத்திற்கு சாதகமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்து பேட்டியளித்த காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறுகையில், "கர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான அளவு தண்ணீரே வந்திருப்பதாக அவர்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே மழை அளவைப் பொருத்து, தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்தார். இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.