Skip to main content

அமைச்சர்களை உளவு பார்த்ததா மத்திய அரசு..? பெகாசஸ் சர்ச்சையின் பின்னணியும், அரசின் விளக்கமும்...

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

narendra modi

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.  தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

தொலைபேசி ஹேக்கிங் தொடர்பான தற்போதைய சர்ச்சை என்ன?

 

பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் (NSO GROUP) தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மென்பொருளைக் கொண்டு ஒருவரின் தொலைபேசியை ஹேக் செய்து, அவர் என்ன வார்த்தையைத் தட்டச்சு செய்கிறார் என்பது வரை கண்காணிக்க முடியும். இந்தநிலையில் 'போர்பிடேன் ஸ்டோரிஸ் மற்றும் 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' ஆகியவை பெகாசஸ் மென்பொருளால் ஹேக் செய்யப்பட்ட தொலைபேசி எண்கள் உள்ள தரவுதளத்தை கண்டறிந்து, அதிலுள்ள எண்களை சர்வதேச ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

 

இதனையடுத்து இந்த ஊடகங்கள், அந்த தொலைபேசி எண்கள் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வு செய்தன. இதில் உலகம் முழுவதும் பல்வேறு ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் எண்களைக் கொண்டு அவர்களது ஃபோன்கள் ஹேக்  செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி எண்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

என்.எஸ்.ஓ குரூப், தங்களது பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது. இதனால் அரசே சட்டத்தை மீறி உளவு பார்த்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவே சர்ச்சைக்குக் காரணம்.

 

ஹேக்கிங் சர்ச்சை தொடர்பாக என்.எஸ்.ஓ குரூப் மற்றும் ஆய்வு செய்த ஊடகங்கள் கூறுவது என்ன?

 

இந்த சர்ச்சை தொடர்பாக என்.எஸ்.ஓ குரூப், தற்போது வெளியாகியுள்ள இந்த எண்கள், அரசாங்கத்தால் ஹேக் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுபவர்களின் எண்களாக இருக்காது எனவும், என்.எஸ்.ஓ குரூப் வாடிக்கையாளர்களால் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளது.

 

அதேநேரத்தில்  'பெகாசஸ் ப்ராஜெக்ட்' ஆய்வில் ஈடுபட்ட ஊடகங்கள், "வெளியான எண்களில், சில எண்களைப் பயன்படுத்திய தொலைபேசிகளை நாங்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில், 37 தொலைபேசிகள் பெகாசஸ் மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் இருக்கின்றன"எனக் கூறியுள்ளன. இந்த 37 தொலைபேசிகளில் 10 தொலைபேசிகள் இந்தியர்களுக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹேக்கிங் சர்ச்சை குறித்து மத்திய அரசு கூறுவது என்ன?

 

பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அரசு மறுத்துள்ளது. "இந்தியா ஒரு வலுவான ஜனநாயகம், அது அனைத்து குடிமக்களுக்கும் 'தனியுரிமை ஒரு அடிப்படை உரிமை'யாக இருப்பதை உறுதி செய்ய உறுதி பூண்டுள்ளது. குறிப்பிட்ட நபர்கள் மீதான அரசாங்க கண்காணிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு உறுதியான அடிப்படை ஆதாரமோ, குற்றச்சாட்டில் உண்மையோ இல்லை" எனக் கூறியுள்ளது.

 

மேலும் தொலைபேசி உரையாடல்களைக் குறுக்கீடு செய்வது, கண்காணிப்பது என அனைத்தும் சட்டப்படியே செய்யப்படுகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் தொலைபேசியை ஹேக்கிங் செய்வது என்பது சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்