இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன. இந்தநிலையில் சமீபத்தில் ஒரு ஆய்வு, கோவாக்சினைவிட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதாக தெரிவித்தது.
ஆனால், கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இதனை மறுத்தது. அந்த ஆய்வில் பல்வேறு குறைகள் இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில், எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியாவிடம், கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் v ஆகிய தடுப்பூசிகளில் எது அதிக செயல்திறன் கொண்டது என்று கேள்வியெழுப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ரன்தீப் குலேரியா, "தற்போதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி, கோவிஷீல்டோ, கோவாக்சினோ, ஸ்புட்னிக்கோ அனைத்து தடுப்பூசிகளும் கிட்டத்தட்ட சமமான செயல்திறன் கொண்டவை. எனவே உங்கள் பகுதியில் எந்தத் தடுப்பூசி கிடைக்கிறதோ, அதை செலுத்திக்கொள்ளுங்கள். எனவே நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருப்பீர்கள்" என கூறியுள்ளார்.