மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் இருக்கும் பாஜக எம்.பி சாத்வி பிரக்யா தாகூர், விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பிரக்யா, மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் வாரம் தோறும் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலை உள்ளது.
உடல்நிலையை காரணம் காட்டி விசாரணைகளில் பங்கேற்காமல் இருந்த நிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, குண்டு வெடிப்பு தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் தெரியாது என்றே பதிலளித்தார்.
இதற்கிடையே, தினமும் நாடாளுமன்றம் செல்ல வேண்டியது இருப்பதாலும், தொகுதி பிரச்னைகளை கவனிக்க வேண்டியது இருப்பதாலும் விசாரணையில் ஆஜராக நிரந்தரமாக விலக்கு அளிக்கும்படி அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இன்று அதனை விசாரித்த நீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்தார்.