ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கடந்த 10 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர், சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
அதே சமயம் சந்திரபாபு நாயுடு கைது விவகாரம் தொடர்பான வழக்கில் விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணி நேரமாக இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டு செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ராஜமகேந்திரவரம் சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்றுடன் அவரின் நீதிமன்றக் காவல் நிறைவடையும் நிலையில், சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மேலும் நீதிபதி முன்பு சந்திரபாபு நாயுடு காணொளி காட்சி மூலம் ஆஜரானர். அப்போது, தான் செய்யாத குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் முறையிட்டார். அதற்கு நீதிபதி, நீங்கள் நீதிமன்றக் காவலில் தான் உள்ளீர்கள். போலீஸ் காவலில் இல்லை என்றும் தெரிவித்தார். அதே சமயம் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.