கோவையை அடுத்த சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் குடியரசு தலைவரின் கலர்ஸ் பிரசன்டேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா, விமானத்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புவது அவரது கையில் தான் இருக்கிறது என கூறினார்.
மேலும், "'பால்கோட் பயங்கரவாத முகாம்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என விமானப் படையால் உறுதியாகக் கணக்கிட முடியாது. மத்திய அரசே அதைத் தெளிவுபடுத்தும். எங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தோமோ இல்லையா என்பதை தான் நாங்கள் பார்த்தோம். நாம் நமது எதிரிகளை துல்லியமாகத் தாக்கியதால்தான், அவர்கள் மீண்டும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் மிக் ரக 21 வகை விமானங்கள் பழைய விமானங்கள் அல்ல. அவற்றை நாங்கள் நவீனப்படுத்தியுள்ளோம். அதில் தரமான ராடார் வசதி, ஏவுகணை வசதி, ஆயுதங்களை சேமிக்கும் வசதிகள் ஆகியவை புதிப்பிக்கப்பட்டுள்ளன. விங் கமாண்டர் அபிநந்தன் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டும் தான் பணியில் மீண்டும் சேர்க்கப்படுவார். அது அவரின் கையில்தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு என்ன சிகிச்சை தேவைப்படுகிறதோ, அது உரிய முறையில் அளிக்கப்படும்" என கூறினார்.