எஸ்பிஐ தலைவரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாகத் திட்டியதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வங்கி அதிகாரிகள் சங்கம் நிர்மலா சீதாராமனைக் கண்டித்து வெளியிட்ட கண்டன அறிக்கையைத் திரும்பப்பெற்றுள்ளது.
அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பிப்ரவரி கடைசி வாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கும் வங்கி தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சுமார் இரண்டரை லட்சம் வங்கிக் கணக்குகள் KYC விதிமுறைகள் காரணமாக முடங்கியதற்காக எஸ்பிஐ தலைவரை நிதி அமைச்சர் கடுமையாகத் திட்டியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
"நீங்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி என்று என்னிடம் சொன்னால்.. அது தவறு... நீங்கள் இதயமற்ற வங்கி. உங்கள் திறமையின்மையே இந்த பிரச்சனைக்குக் காரணம்" என எஸ்பிஐ தலைவரிடம் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பதுபோல அமைந்திருந்தது. இந்த ஆடியோ சர்ச்சையான நிலையில் அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு நிர்மலா சீதாராமனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில், ஆடியோவின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்ட சூழலில், தனது கண்டன அறிக்கையைத் திரும்பப் பெறுவதாக அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.