இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் தெரிவித்தன. இதுதொடர்பாக மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உரசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மே ஒன்று முதல், தடுப்பூசிகளை மாநிலங்கள் நேரடியாக வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இந்தநிலையில், ஹரியானா மாநிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் திருடுபோயுள்ளன. ஹரியானா மாநிலம் ஜிண்ட் பகுதியில் உள்ள சிவில் மருத்துவமனையில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 1,710 கரோனா தடுப்பூசி டோஸ்களை திருடிச் சென்றுள்ளனர். இதில் 1,270 கோவிஷீல்ட் டோஸ்களும், 440 கோவாக்சின் டோஸ்களும் அடங்கும். மேலும் தடுப்பூசி சேமிக்கப்பட்ட இடத்திலிருந்த சில கோப்புகளும் திருடப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.