மத்திய கல்வி அமைச்சக மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று (11/09/2020), புதிய கல்விக்கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில், '21ம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' என்ற தலைப்பில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்திச் செய்யும். 30 ஆண்டில் உலகின் ஒவ்வொரு பிராந்தியமும் மாறினாலும் நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படி தொடர்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து என்ன உள்ளதோ அப்படியே புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும். நவீன இந்தியாவின் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் நிறைவேற்றக்கூடியது புதிய கல்விக்கொள்கை.
எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள கல்விக்கொள்கை வாய்ப்புகளை உருவாக்கும். மாணவர்களின் உள்ளம், அறிவை அறிவியல் பூர்வமாக வளர்க்கும் கல்விக்கொள்கை. பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும். இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது. குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும்.
சுற்றுச்சூழல் பற்றிய அறிவு மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். மரங்களை தெரிந்துகொள்ள நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிகரமாக இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், விவசாய நிலங்கள் என பல இடங்களில் மாணவர்களுக்கு அறிவை புகட்ட முடியும். 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும்" இவ்வாறு பிரதமர் பேசினார்.