இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்துவருகிறது. அதேநேரத்தில் மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையை ஏற்படுத்திய டெல்டா வகை கரோனா, தற்போது டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்து பரவிவருகிறது. இதுவரை 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, கரோனா மூன்றாவது அலை இரண்டாவது அலையைப் போன்று கடுமையாக இருக்காது என கருதுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "மூன்றாவது அலை இரண்டாவது அலையைவிட கடுமையானதாக இருக்குமா என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. அடுத்த அலை இரண்டாவது அலைபோல மோசமாக இருக்காது என கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும் "இரண்டாவது அலையில் இருந்து கற்றுக்கொண்டு, அதற்கேற்ப சாத்தியமான மூன்றாவது அலையை சமாளிக்க நாம் தயாராக வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து டெல்டா ப்ளஸ் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ரந்தீப் குலேரியா, "டெல்டா ப்ளஸ் கரோனா பரவலை நாங்கள் கண்காணித்துவருகிறோம். தற்போது டெல்டா ப்ளஸ் கரோனா இந்தியாவில் அதிகம் பரவவில்லை. டெல்டா வகை கரோனா அதிகம் பரவியிருக்கிறது. எனவே நாம் அதைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மரபணு வரிசைமுறையை சோதனை செய்து, டெல்டா வகை கரோனா நமது மக்களிடையே எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தயாராக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
'டெல்டா' வகை கரோனவை சமாளிக்க தடுப்பூசியின் முதல் டோஸ் போதுமானதாக இருக்காது என்பது கவலைக்குரிய விஷயமாகும். சிறந்த பாதுகாப்பை உறுதிபடுத்த பூஸ்டர் டோஸை (இரண்டாவது டோஸ்) நாம் முன்கூட்டியே தர வேண்டியிருக்கும்" என தெரிவித்துள்ளார்.