பீகார் மாநில தேர்தலுக்கான பிரதமரின் பிரச்சாரத்தில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும், வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், பா.ஜ.க கூட்டணியை ஆதரித்து, பிரதமர் மோடி இன்று முதல் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதில் சசாரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமலும் முகக் கவசங்கள் அணியாமலும் பெரும்பாலானோர் இருந்தனர். நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அதனைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பிரதமரின் தேர்தல் பிரச்சாரத்தில் நடைபெற்ற இந்த விதிமீறல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கூட்டங்களில் கரோனா நெறிமுறையை மீறியதாக மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்ட நிலையில், பிரதமரின் பிரச்சார கூட்டத்திற்கும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.