உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 42,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த சிறப்பு மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்குக் கரோனா தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
![b](http://image.nakkheeran.in/cdn/farfuture/Kvf8bd8jo-nmrWtv9SRnUm-JHzpEnfae-NzK7HDcOHs/1585719871/sites/default/files/inline-images/ccvb.jpg)
மார்ச் முதல் வாரத்தில் நடந்த இந்த வழிபாட்டுக் கூட்டத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்தக் கூட்டத்திற்கு, சவுதி அரேபியா, இந்தோனேசியா மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் விருந்தினர்கள் வந்துள்ளனர். இந்தக் கூட்டம் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையிலும் இதில் பங்கேற்ற பலருக்குக் கரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம் எனப் பல இந்திய மாநிலங்களிலிருந்து இந்த நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியவர்களுக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நேற்று மட்டும் 50 பேருக்கு இந்தபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வட இந்திய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் யார் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டார்கள் என்பதைக் கண்டறிந்து வருகின்றன. இவர்கள் மூலம் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அந்தெந்த மாநிலங்களும் போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறையை முடுக்கிவிட்டுள்ளது.