இந்தியாவில் கரோனா உயிரிழப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் பூஜ்ஜியம் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய கரோனா பாதிப்பு இன்று வரை தொடர்கிறது. கரோனா பாதிப்பு அளவு மட்டுமே அடிக்கடி வித்தியாசப்பட்டு வந்தது. மூன்று முறை ஊடரங்கு பிறப்பிக்கும் வகையில் கரோனா உச்சக்கட்டத்தை அடைந்தது. குறிப்பாக 2021ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கரோனா உச்சக்கட்டத்தை அடைந்தபோது தினசரி 4.5 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தினசரி உயிரிழந்து வந்தனர்.
இந்த எண்ணிக்கை எப்போது குறைந்து உயிரிழப்பு இல்லாத தினம் வரும் என்று சுகாதாரத் துறையினர் காத்திருந்த நிலையில் அது தற்போது நிறைவேறி இருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு இன்று பூஜ்ஜிய உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது. அதைப்போல இதுவரை இல்லாத அளவாகக் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 625 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று பதிவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 30 மாதங்களாகத் தொடர்ந்து தினசரி உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில், இன்று உயிரிழப்பு இல்லாத நாளாக அமைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.