கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்பொழுது டெல்லியில் இருக்கும் ராகுல் காந்தி அங்கிருந்து உத்தரப் பிரதேசம் செல்கிறார்.
ஜனவரி 26 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிற நிலையில் நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி தற்போது ராகுல் காந்தியின் பேரணியில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். தற்போது டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் காந்தியடிகளின் நினைவிடத்திற்குச் சென்று இருவரும் மரியாதை செலுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பேரணியில் மக்கள் நீதி மையத்தின் கட்சி தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பேரணி இன்று செங்கோட்டையில் நிறைவு செய்யப்பட்டு மீண்டும் ஜனவரியில் தொடங்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ''இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல்காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண், மொழி, மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்!'' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் @RahulGandhi முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், @maiamofficial நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! #BharatJodoYatra
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2022