Skip to main content

விவசாய தலைவர்களைக் கொல்ல சதி?... மிரட்டியதாலேயே அவ்வாறு கூறினேன் - பிடிபட்ட நபரின் வைரல் வீடியோ!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

farmers

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று, மாபெரும் ட்ராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று (22.01.2021) இரவு, சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத் தலைவர்கள், முகமூடி அணிந்த ஒருவரைப் பிடித்து பத்திரிகையாளர் முன் நிறுத்தியதோடு, விவசாய சங்கத் தலைவர்களைக் கொலை செய்யவும், போராட்டத்தை சீர்குலைக்கவும் சதி நடப்பதாக குற்றம் சாட்டினர்.

 

பிடிபட்ட நபர், 26ஆம் தேதி நடக்கும் ட்ராக்டர் பேரணியின்போது போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தவும், 24ஆம் தேதி மேடையில் இருக்கும் நான்கு பேரை சுடவும் தங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னைத் தவிர இரண்டு பெண்கள் உட்பட மேலும் ஒன்பது பேர் போராட்டத்தில் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த நபரை ஹரியானா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில், தற்போது அந்த இளைஞர் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த இளைஞர், விவசாயிகள் தன்னை அடித்து துன்புறுத்தி, மது அளித்து அவ்வாறு பேச சொன்னதாக கூறியுள்ளார். மேலும் அவ்வாறு பத்திரிகையாளர்களிடம் பேசவில்லையெனில், தன்னை கொலை செய்து விடுவதாக விவசாயிகள் அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அதே நேரத்தில் அந்த நபரின் ஃபோனிலிருந்து, நான்கு விவசாய சங்கத் தலைவர்களின் புகைப்படங்களை ஹரியானா போலிஸார் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்