நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டெம்பரில் தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கரோனா தீவிரமாக இருக்கும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணையில் கரோனா காலத்தில் உரிய பாதுகாப்புடன் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு வாதம் செய்தது. இந்த வாதத்தை ஏற்று, தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணிக்க பழகுங்கள். கரோனா காலத்தில் நீதிமன்றங்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக செயல்படத் தொடங்கிவிட்டது என்பதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தனர்.