ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாகவும், மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் இன்று காலை மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார்.
அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்தார். அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் இந்த முடிவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, 370 சட்டப்பிரிவு நிகழ்வில் "வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது" என்ற எழுதியுள்ளார்.
மேலும் தனது மற்றொரு பதிவில், "என்ன ஒரு மகத்தான நாள். இறுதியாக ஜம்மு காஷ்மீரை இந்திய ஒன்றியத்தில் ஒருங்கிணைப்பதற்காக டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியுடன் தொடங்கி ஆயிரக்கணக்கான தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள், மேலும் ஏழு தசாப்தங்களாக பழைய நாடு முழுவதும் நம் கண்களுக்கு முன்பாக உணரப்பட வேண்டும்; உங்கள் வாழ்நாளில். எப்போதாவது கற்பனை செய்தீர்களா?" என கூறியுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள மோடியின் புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்னர் 370 ஆவது சட்டப்பிரிவை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.