
கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்ககர தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் பி.டி.தாமஸ். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு மரணமடைந்தார். இந்த நிலையில், அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் பி.டி.தாமஸின் மனைவி உமா தாமஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோசப் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முதலே முன்னிலை வகித்த உமா தாமஸ், 72,000 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோசப் 47,000 வாக்குகள் மட்டுமே பெற்றதால் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் உமா தாமஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக திருக்ககர தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையிலும், 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.